கவிஞர் உதயகுமார் சிரித்த முகத்தில் மறைந்து கிடக்கும் சிங்கம்!
அடக்கக் குணத்தில் அமைந்து கிடக்கும் வேங்கை!
உள்ளேயே கனன்று கொண்டிருக்கும் எரிமலை!
அவர்தம் கவிதைத் தொகுப்பில் சிங்கத்தின் முழக்கம் கேட்கிறது; புலியின் உறுமல்
கேட்கிறது; எரிமலையின் கனல் நெருப்பு புகைகிறது!
– துணைவேந்தர், பேராசிரியர், டாக்டர் க.ப.அறவாணன்
ஆழ்ந்த நோக்கும், அகன்ற சிந்தனையும் ஆராய்ச்சித் திறனும் இவர்தம் கவிதையின் கட்டுக்கோப்புகளாகின்றன.
– துணைவேந்தர், பேராசிரியர், டாக்டர் அவ்வை நடராசன்
‘ஓர் அழகின் வெளிச்சமாம்’ கவிஞரின் சொற்கள் ஆகாதனவற்றைச் சுட்டெரித்து அழிக்கின்றன. அமைதி தவழும் நல்வாழ்வுப் பயிரை வளரச் செய்கின்றன!
– டாக்டர் சிலம்பொலி செல்லப்பன்
உதயகுமார் கவிதைகள் கைம்மைக் கலக்கம் இல்லாத கவிதைகள். கரியாகாத கனல்கள், காலச் சம்மட்டி கரைக்க முடியாத கருக்கள், புறப்பட்ட கதிரவன் பொந்துக்குள் போவதில்லை, இந்தப் போர்ப் பாடல்களும் தாம்.
– பேராசிரியர் டாக்டர் மா. செல்வராசன், சென்னைப் பல்கலைக்கழகம்
அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாய்க் கவிதைப்பாத்திரத்தை இவர் கையில் வைத்திருக்கிறார்.
பசித்துக் கிடக்கும் சமுதாயத்திற்குச்
சோறு போட்டு அது வீறு ஏற்றுகிறது.
நெஞ்சக் கனல் பரப்பும் நெற்றிக் கண்!
இவரது கவிதைகளின் வெற்றிக் கண்!
– கலைமாமணி, கவிஞர், பேராசிரியர் மு.மேத்தா
புது வையம் காணவும் சமுதாய மாற்றம் நிகழவும் விரும்பத் துடிக்கும் அவர்தம் இதயவொளி ‘ஓர் அழகின் வெளிச்ச’மாகிறது. அழகின் வெளிச்சமும் அன்பின் வெளிச்சமும் தன்னுணர்ச்சிச் செழிப்போடு ஒளிர்கின்றன.
– கவிஞர், பேராசிரியர், டாக்டர் மின்னூர் சீனிவாசன்
இவரது கவிதைகளில் போலி முகம் இல்லை! எழுத்து வணிகம் இல்லவே இல்லை! சமரச சாத்தியம் அறவே இல்லை! ஒரு போர்க்கருவியாக இவரது புதுக்கவிதைகள் முகங்காட்டுகின்றன!
– கவிஞர், பேராசிரியர், டாக்டர் பொன்.செல்வகணபதி